பத்திரிகை நிறுவனத்தினுள் புகுந்த குழுவின் சூத்திரதாரி கைது!

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை அலுவலகத்தினுள் புகுந்து குழுவொன்று அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் அந்தச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி எனச் சந்தேகிக்கப்படும் போதகர் ஒருவரைப் பொலீஸார் கைது செய்துள்ளதாகத் தெரியவருகிறது.

உதயன் பத்திரிகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியாகியிருந்த செய்தி தொடர்பில், அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் கிருஸ்தவ மதக்குழு ஒன்றின் போதகர் தலைமையிலான குழு ஒன்று நேற்றுக் காலை யாழ்ப்பாணம் – கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள பத்திரிகைக் காரியாலயத்தினுள் புகுந்து அட்டூழியம் புரிந்திருந்தது. அதனையடுத்து பத்திரிகை நிறுவனத்தின் முறைப்பாட்டுக்கமைய சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் போதகரை இன்று திங்கட்கிழமை அதிகாலை 1:00 மணியளவில் பொலீசார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அச்சுவேலிப் பகுதியில் உள்ள வீடொன்றினுள் கிறிஸ்தவ மத போதகர் ஒருவரின் தலைமையிலான கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த வயோதிப பெண் உட்பட இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் படி விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், போதகர் , அவரது மகன் உள்ளிட்ட மூவரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பொலிஸ் பிணையில் அவர்களை விடுவித்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உதயன் பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது.

இந்நிலையில், அச்சுவேலியில் இருந்து தமது சபைக்குச் சொந்தமான சொகுசுப் பேருந்து மற்றும் பட்டா வாகனம் என்பவற்றில் உதயன் பத்திரிகை அலுவலகத்துக்கு வந்து, பத்திரிகை அலுவலக வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்து அடவாடியில் ஈடுபட்டதுடன் , நிறுவனத்தில் வேலை செய்தவர்களையும் அனுமதியின்றித் தமது கையடக்க தொலைபேசிகளில் வீடியோ , புகைப்படங்கள் எடுத்தும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. பொலிஸார் சம்பவ இடத்துக்கு வர முன்னர் அக் கும்பல் தமது சொகுசுப் பேருந்திலும், பட்டா வாகனத்திலும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றது.

சம்பவம் தொடர்பில் பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 1:00 மணியளவில் பிரதான சூத்திரதாரி எனச் சந்தேகிக்கப்படும் போதகரைப் பொலீஸார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!