பிரதமர் தலைமையில் நடைபெற்ற கல்வி மறுசீரமைப்புக்கான தேசிய குழுவின் முதலாவது கூட்டம்!

கல்வி மறுசீரமைப்பு பற்றிய தேசிய வழிநடத்தல் குழுவின் விசேட கூட்டம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்டுள்ள இக்குழு, ஒட்டுமொத்த கல்வி மறுசீரமைப்புச் செயல்முறைக்கும் பொறுப்புக்கூறுவதுடன், அதன் அனைத்து அம்சங்களையும் தரப்பினரையும் முறையாக ஒழுங்குபடுத்தி, உயர்தரத்திலான கல்வி மறுசீரமைப்பை முன்னெடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி அனுர கருணாதிலக்கவின் தலைமையில் அமைந்துள்ள இக்குழுவில், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி எம். ஏ. உபாலி மாம்பிட்டிய, இலங்கை கடல்சார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் நலின் ரத்நாயக்க, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் செங்கரப்பிள்ளை அறிவழகன், யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் பிரபாத் ஜயசிங்க, அமைச்சின் முன்னாள் செயலாளர் நிமல் தயரத்ன பண்டார, ஓய்வுபெற்ற அதிபர்களான பண்டார வீரசிங்க மற்றும் வி. உதயகுமார், தேசிய கல்வி நிறுவனத்தின் கல்விச் சபைத் தலைவர் பேராசிரியர் பிரியங்கனி சேனநாயக்க, தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ. டப்ளியூ. என். நலீபா ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

அத்தோடு, அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் யல்வெல பஞ்ஞாசேகர தேரர், சுயாதீன கல்வி ஊழியர் சங்கத்தின் ஜகத் ஆனந்த சில்வா, இலங்கை தேசிய பாடசாலை அதிபர்கள் சங்கத்தின் கபில பிரியந்த, இலங்கை ஆசிரியர் ஊழியர் சங்கத்தின் ஜி. ஏ. எம். சமித் ஹர்ஷநாத ஆகியோர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளாக இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர். மேலதிக செயலாளர் (கல்வி மறுசீரமைப்பு) எம். ஏ. வி. எஸ். எதிரிசூரிய இக்குழுவின் அழைப்பாளராகச் செயற்படுகின்றார்.

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான ஐந்து பிரதான விடயங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் பணிகளை ஆராய்தல், அவற்றைச் சரியான திசையில் வழிநடத்துதல், எதிர்கால சவால்களுக்குத் தீர்வுகளை முன்வைத்தல் மற்றும் இச்செயல்முறைக்கான சமூக அங்கீகாரத்தை உயர்த்துதல் ஆகியவற்றை இக்குழு நோக்கமாகக் கொண்டுள்ளது.

கல்வி மறுசீரமைப்பு பற்றிய தேசிய வழிநடத்தல் குழு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகளின் பங்கேற்புடன், மனிதவள அபிவிருத்தி, அடிப்படை வசதிகள் அபிவிருத்தி மற்றும் நிர்வாகம், பாடத்திட்ட அபிவிருத்தி, அளவீடு மற்றும் மதிப்பீடு, பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் பிரச்சாரம் ஆகிய அனைத்துக் கல்வி மறுசீரமைப்பு அம்சங்களையும் உள்வாங்கும் வகையில் உப குழுக்கள் கூடவிருப்பதாகப் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!