இலங்கையில் பொதுப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்கும், நவீன தொழில்நுட்ப முறைமைகளில் பயிற்சிகளை விரிவுபடுத்துவதற்குமாக ரஷ்யாவுக்கும், இலங்கைக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச போக்குவரத்து மற்றும் போக்குவரத்து ஏற்பாட்டு மாநாட்டின் போது, ரஷ்ய போக்குவரத்து அமைச்சுக்கும் இலங்கை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும், ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் ஆண்ட்ரே நிகிடினும் இருநாடுகளின் சார்பிலும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தின் படி, இரு நாடுகளும் போக்குவரத்துத் துறையில் பயிற்சி மற்றும் மனிதவள மேம்பாட்டில் இணைந்து பயணிப்பதற்குத் தீர்மானித்துள்ளன.
பன்முனைப் போக்குவரத்து மையங்கள், நகர்ப்புற மற்றும் பிராந்தியப் போக்குவரத்து அமைப்புகள், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் முகாமைத்துவம், வீதிப் பாதுகாப்பு, போக்குவரத்துச் சட்டம் மற்றும் பொருளாதாரம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, எண்ணிமமயமாக்கல் மற்றும் உலகளாவிய போக்குவரத்துப் போட்டித்திறன் உட்பட முக்கிய துறைகளில் கல்வி மாநாடுகள், பயிலரங்குகள் மற்றும் பயிற்சித் திட்டங்களை ஏற்பாடு செய்வதற்கும், பணியாளர் பகிர்வு உட்பட இணைந்து செயற்படுவதற்கும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் இணங்கிக் கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வுக்கு முன்னதாக இரு நாடுகளினதும் போக்குவரத்து அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது.
அந்தச் சந்திப்பின் போது, கொழும்பிலிருந்து அவிசவெல்லா வரையிலான 60 கிலோமீட்டர் நீளமுள்ள களனிப் பள்ளத்தாக்கு புகையிரதப் பாதையைப் புனரமைக்கும் முன்மொழியப்பட்ட திட்டம் உட்பட, புகையிரத்துறை ஒத்துழைப்பு குறித்து ஆராயப்பட்டது.
புகையிரத் துறை நவீனமயமாக்கல், புகையிர்ப் பெட்டிகள் வழங்கல் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் ரஷ்ய நிறுவனங்களின் பங்களிப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், போக்குவரத்துக் கல்வி மற்றும் பணியாளர் பயிற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில், கொழும்பில் ரஷ்ய போக்குவரத்துப் பல்கலைக்கழகத்தின் கிளை ஒன்றை நிறுவவும் ரஷ்யத் தரப்பு முன்மொழிந்தது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் பயணிகள் போக்குவரத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இரு தரப்பினரும் ஆராய்ந்தனர்.
