கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை எந்தக் காரணங்களுக்காகவும் பாடசாலை அதிபர்கள் தம்வசம் வைத்துக்கொள்ள வேண்டாம் என அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தொடர்பான ஏனைய பிரச்சினைகளுக்காக அவர்களின் உரிமைகளை மறுக்க வேண்டாம் எனவும் அனுமதி அட்டைகளை உடனடியாக மாணவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அதிபர்களை அறிவுறுத்தியுள்ளார்.
சில பாடசாலைகளில் பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை அதிபர் வழங்கவில்லை எனப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளன. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவுள்ள பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகளில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அதற்கு கால அவகாசம் உள்ளது. ஒன்லைன் ஊடாகத் திருத்தங்களை மேற்கொள்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளது. எனினும், பரீட்சை அனுமதி அட்டைகளில் ஏதாவது திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின், பரீட்சைகள் திணைக்களத்துக்கு நேரில் சமுகமளித்தோ அல்லது மின்னஞ்சலின் ஊடாகவோ அதனை செய்துகொள்ள முடியும் எனவும், பரீட்சை மண்டபங்களுக்கு சென்று திருத்தங்களை மேற்கொள்வதனால் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.