இந்திய அரசாங்கத்தின் பொருளாதார உதவித் திட்டத்தின் கீழ் மேலும் 50 பேருந்துகள் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் தக்லே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தப் பேருந்துகளை வைபவ ரீதியாகக் கையளித்தார். பேருந்துகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
இலங்கையில் பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்காக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய இந்திய அரசாங்கத்தினால், இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியின் நிதியுதவித் திட்டத்தில் இந்தப் பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னரும் 75 பேருந்துகள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருந்தன.
நாடெங்குலும், கிராமிய போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில் இலங்கை போக்குவரத்து சபையினால் இப்புதிய பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.