விபத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

புத்தாண்டு உதயத்தை முன்னிட்டு கடமையில் ஈடுபட்டிருந்த அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

ஆணையை மீறி நிறுத்தாமல் சென்ற மதுபோதையிலிருந்த சாரதி ஒருவரின் கார் மோதி இன்று 1ஆம் திகதி அதிகாலை இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் அம்பலாந்தோட்டை வளவை கங்கை பாலத்திற்கு அருகிலுள்ள வீதி சோதனை சாவடியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அம்பலாந்தோட்டை நோக்கிப் பயணித்த காரை நிறுத்துமாறு ஆணையிட்ட போதும், அதனை நிறுத்தாமல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் சூரியவெவ, வீரியகம பிரதேசத்தைச் சேர்ந்த  இரண்டு பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் கான்ஸ்டபிள் (82615) எம். சரத் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் கடமையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்து அம்பலாந்தோட்டை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தப்பிச் சென்ற கார் அம்பலாந்தோட்டை நகருக்கு அருகிலுள்ள பகுதியில் மீட்கப்பட்டுள்ளதுடன், காரில் பயணித்த சாரதி உட்பட இருவர் அம்பலாந்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் இருவரும் அதிகளவில் மதுபோதையில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!