யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 4ஆம் திகதி ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை இறக்கி, கறுப்புக் கொடி ஏற்றிய விவகாரத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கலைப்பீட மாணவர் ஒன்றியம் ஆகியவற்றைச் சேர்ந்த 3 மாணவர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கக் கொடியை இறக்கி – அதற்குப் பதிலாகக் கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், 03 மாணவர்களை யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவில் கடந்த 16 ஆம் திகதி முற்படுத்துமாறு பலகலைக்கழகப் பதிவாளரை மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி கடந்த 13 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் கேட்டிருந்தார்.
அதன்படி, தர்மலிங்கம் ஜதுர்சன், தயாபரன் லஜிதரன், ஏ. அபிசேக் ஆகியோரை யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுக்குச் செல்லுமாறு பல்கலைக்கழக ஒழுக்காற்று அதிகாரியினால் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அந்த அறிவுறுத்தலுக்கமைய இன்று காலை மாணவர்கள் மூவரும் யாழ்ப்பாணம் பொலீஸ் தலைமைக் காரியாலயத்தில் அமைந்துள்ள மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுக் சென்ற போது, அவர்களின் வாக்குமூலங்களைப் பொலீசார் பதிவு செய்யதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், விசாரணை என்ற பெயரில் மாணவர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாவதைக் கண்டிக்கும் விதத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை விரிவுரைகளுக்குச் செல்லாமல், கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
