2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி யார் என்பது குறித்த இரகசியத்தை எதிர்வரும் 31 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை நாட்டுக்கு வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சுமார் ஒன்றரை வருட காலமாக தாம் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் அடிப்படையில், ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தேடல்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி நூல் ஒன்றைத் தொகுத்துள்ளதாக அவர் இந்தச் சந்திப்பின் போது தெரிவித்தார்.
இந்த நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 31 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு கொழும்பு சம்புத்தத்வ ஜயந்தி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த வெளியீட்டு நிகழ்வின் போது, அரசாங்கத்தினால் இதுவரை வெளிப்படுத்தப்படாத பல முக்கிய உண்மைகளைத் தாம் பகிரங்கப்படுத்தப் போவதாக உதய கம்மன்பில நேற்றைய ஊடக சந்திப்பில் கூறினார்.
கடந்த ஏழு வருடங்களாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் அரசியலுக்காக விற்கப்படுகிறது.
ஆட்சிகளை உருவாக்கவும், கவிழ்க்கவும் இது பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இன்றி, இராணுவ வீரர்களை வேதனைப்படுத்துவதற்கு இந்தத் தாக்குதல் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டதாகவும்,
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த ஏமாற்று வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்றும் அவர் அங்கு குறிப்பிட்டார்.