கடந்த நான்கு நாட்களுக்கு முன் காணாமல் போனதாகப் பொலீசாரால் தேடப்பட்டு வந்த யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட விரிவுரையாளரின் உடலம் சாவகச்சேரி – தனங்கிளப்பு, அறுகுவெளிப் பகுதியில் இருந்து இன்று காலை உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் சமூகநல மருத்துவத் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான சித்த மருத்துவ கலாநிதி தயாளினி திலீபன் (வயது 54) என்பவரின் உடலமே இன்று காலை யாழ்ப்பாணம் பொலீசாரால் மீட்கப்பட்டது.
உடலமாக மீட்கப்பட்ட விரிவுரையாளருக்கும், அவரது மகள், மகளது கணவர் ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட குடும்பத்தகறாரே கொலையில் முடிந்திருப்பதாகப் பொலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அரியாலை – புங்கன்குளத்தை அண்மித்த பகுதியில் தனது மகளுடன் வசித்து வந்த விரிவுரையாளருக்கும் மகள் மற்றும் மகளின் கணவர் ஆகியோருக்கிடையில் நீண்ட காலமாகப் பிணக்கு நிலை இருந்துள்ளது. கொல்லப்பட்டவரின் மகன் வட மத்திய மாகாணத்திலுள்ள பலகலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.
சம்பவம் இடம்பெற்ற நாளுக்கு அடுத்த நாள், தனது தாயாரையும், சகோதரியையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் வீட்டுக்கு வந்த அவரது மகன், வீட்டில் அசம்பாவிதம் நடைபெற்றிருந்ததை அவதானித்த அதேசமயம், வீட்டில் நின்ற தாயாரின் கார் காணமல் போனதையும் அவதானித்துள்ளார்.
அன்றைய தினமே – கடந்த வியாழக்கிழமையே யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்தில் தனது தாயாரையும், சகோதரியையும் சகோதரியின் கணவர் கடத்தி விட்டார் என்று முறைப்பாடு செய்துள்ளார்.
அதேசமயம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் சம்பவம் தொடர்பில் போலீஸார் விரைந்து செயற்பட வேண்டும் என வட பிராந்தியப் பிரதிப் பொலீஸ்மா அதிபரை கடிதம் மூலமும், நேரில் சந்தித்தும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
இதனையடுத்து யாழ்பாணம் போலீசார் தீவிர விசாரணைகளில் இறங்கியுள்ளனர்.
விசாரணைகளின் போது, யாழ்ப்பாணத்திலிருந்து காரில் புறப்பட்ட மகளும், மருமகனும் பரந்தன் சந்தியில் உள்ள வங்க ஒன்றின் தன்னியக்க இயந்திரத்தில் விரிவுரையாளரின் வங்க அட்டையைப் பயன்படுத்தி பணத்தைப் பெற்றிருக்கின்றனர் என்பதும், திருகோணமலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கொல்லப்பட்ட விரிவுரையாளரின் தொலைபேசி இலக்கத்தில் பதிவு செய்யப்பட்ட கியூ.ஆர் குறியீட்டைப் பயன்படுத்தி காருக்குப் பெற்றோல் நிரப்பியிருக்கின்றனர்.
இவ்விரு சம்பவங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடங்களில் பெறப்பட்ட கண்காணிப்பு கமெரா பதிவுகளின் அடிப்படையிலும், சந்தேக நபர்களின் தொலைபேசி செல்லிட வரிப்படத்தின் படியும் பின் தொடரந்து சென்ற போலீசார், திருகோணமலை – நிலாவெளிப் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் மாலை இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்படும் வழியில் தாயார் கொலை செய்யப்பட்டு விட்டார் என்பது பொலீஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட தாயாரின் உடலத்தை சாவகச்சேரி – பரந்தன் பகுதிக்கிடையில் காட்டுப்பகுதி ஒன்றில் வீசி விட்டு வந்ததாகப் பொலீசாரிடம் தெரிவித்த சந்தேக நபர்கள், உடலம் வீசப்பட்ட பகுதியைச் சரியாக அடையாளங்காட்டுவதற்குச் சிரமப்பட்டிருக்கின்றனர்.
தனங்கிளப்புக்கு அண்மையாக, காற்றாலை ஒன்றுக்கு அண்மையில் என்ற குறிப்பின் அடிப்படையில் நேற்று அதிகாலை முதல் தேடுதல் மேற்கொண்ட போலீஸார், நண்பகலுக்கு முன்னர் அறுகுவெளிப் பகுதியில் இருந்து உருக்குலைந்த நிலையத்தில் உடலத்தை மீட்டனர்.

சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான் உடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்ட பின், உடற்கூற்றியல் பரிசோதனைகளுக்காக உடலம் யாழ்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உடற்கூற்றியல் பரிசோதனை, மரண விசாரணைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும்
இன்று யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து, தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கான அனுமதியைப் பெற்றுள்ளதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
