பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைச் சவாலுக்கு உட்படுத்தும் விதத்தில் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரலுமான சுரேஸ் சாலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி முழு நாட்டையும் உலுக்கிய உதித்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட்டு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஸ் சாலே தனது சட்டத்தரணிகள் ஊடாக நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த ரிட் மனுவைச் சமர்ப்பித்தார்.
இந்த மனுவில், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்ன, வணக்கத்துக்குரிய ரொஹான் சில்வ மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவின் எதிராளிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
