நேற்று 01ஆம் திகதி இரவு 10 மணியளவில் நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று ஆண்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ள இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஏனைய இருவர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாடகைக்காக பெறப்பட்டிருந்த வீடொன்றில் தங்கியிருந்தவர்களை இலக்கு வைத்து, முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்தவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 20 வயதுடைய பொரளை பகுதியைச் சேர்ந்த இளைஞர் எனவும், காயமடைந்தவர்கள் அம்பலாந்தோட்டை மற்றும் தெமட்டகொடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களில் ஒருவரின் உடலில் 4 துப்பாக்கி ரவைகளும், மற்றுமொருவரின் உடலில் ஒரு ரவையும் பாய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
