அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை எதிர்த்து, இன்று காலை முதல் இலங்கை முழுவதும் 24 மணி நேர டிஅடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் வைத்திய நிபுணர்கள் சங்கம் ஆகியன அறிவித்துள்ளன.
வைத்தியர் தனது கடமையில் இருந்தபோது இவ்வாறான கொடூரத்திற்கு உள்ளாகியமை குறித்து வைத்திய நிபுணர்கள் சங்கம் ஆழ்ந்த கோபத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளதுடன், கடுமையாகக் கண்டித்துமுள்ளது. “இதுபோன்ற வன்முறை சுகாதாரப் பணியாளர்களுக்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்லாமல், சுகாதார அமைப்பின் நேர்மையையும் குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது” என்று வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சங்கத்தினால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்தக் கொடூரம் தொடர்பில் விரைவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
வைத்தியப் பணியாளர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பல்கலைக்கழகங்களில் வைத்தியப் பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினராகப் பெண்களின் எண்ணிக்கை – அதிகரித்து வருகின்றது. எனவே பெண் வைத்தியர்களுக்கு, குறிப்பாக இரவுக் கடமைகளில் பணிபுரிபவர்களுக்கும், முதுகலைப் பயிற்சி பெறுபவர்களுக்கும் பாதுகாப்பான தங்குமிடங்களும் சிறந்த வசதிகளும் அவசரத் தேவையாகவுள்ளன.
மேம்பட்ட கண்காணிப்பு, மருத்துவமனைகளில் பொலிஸ் காவலை அதிகரிப்பது உள்ளிட்ட கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தவேண்டும்” என்றுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிடுவதைத் தவிர்ப்பதன் மூலம் அவரது தனியுரிமையை மதிக்குமாறு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்களையும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.