நான் தலைவரானால் அனைவரையும் இணைத்தே பயணம் – சுமந்திரன் அறிவிப்பு!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைமைக்கு தெரிவு செய்யப்படும் பட்சத்தில் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் இணைத்து இலட்சியப் பயணத்தை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக தலைமைக்கான வேட்பாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைக்கான இரகசிய வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெறவுள்ள நிலையில் அதுதொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாரம்பரிய கட்சியான இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைமைக்கு வாக்கெடுப்பு மூலமாக தலைமைத்தெரிவு நடைபெறவுள்ளமையானது உட்கட்சி ஜனநாயகத்தினை உறுதிப்பத்துவதாக உள்ளது.

அத்துடன், வடக்கு,கிழக்கு மட்டுமல்ல தென்னிலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் முன்னுதரணமாக இருக்கும் வகையில் வாக்கெடுப்பின் மூலமாக தலைமைத் தெரிவு நடைபெறவுள்ளது.

முன்னதாக, கட்சியின் தலைமைத்தெரிவானது, இணக்கப்பாட்டின் அடிப்படையில் நடைபெறவேண்டுமென சிரேஷ்ட உறுப்பினர்கள் எதிர்பார்த்தார்கள்.

அதனடிப்படையில் பேச்சுக்களை முன்னெடுத்தபோதும் வேட்பாளர்கள் இடையே இணக்கப்பாடுகளை எட்டியிருக்க முடிந்திருக்கவில்லை.

இவ்வாறான நிலையில், தற்போது வாக்கெடுப்பின் அடிப்படையில் புதிய தலைமைத்தெரிவானது இடம்பெறுகின்றது.

இதன் மூலமாக வெற்றி அடைந்தவர், தோல்வி அடைந்தவர் என்ற நிலைமைகள் தோற்றம்பெற்று கட்சிக்குள் அக முரண்பாடுகள் வலுத்துவிடும் என்று பல்வேறு பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.

உண்மையில் கட்சியின் தலைமைத்தெரிவு என்பது உட்கட்சி விவகாரம். அத்துடன் கட்சியின் அங்கத்தவர்கள் தமக்கான தலைவரை நேரடியாக வாக்களித்து தெரிவு செய்யப்போகின்றார்கள். இதனால் எவ்விதமான குழப்பங்களும் ஏற்படப்போவதில்லை.

என்னைப்பொறுத்தவரையில், தலைமைக்கான தேர்தலில் வெற்றி தோல்வி என்பதற்கு அப்பால் எமது இட்சியப்பயணத்துக்கான அனைவரையும் ஒன்றிணைத்த செயற்பாடுகள் தொடரும்.

அந்த வகையில், கட்சியின் தலைமைக்கான தேர்தலால் எந்தவிமான பின்னடைவுகளும் ஏற்படப்போவதில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!