மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில், நாடு எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் மாற்று வழிமுறைகளை முறையான திட்டமிடலுடன் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பைக் குறைத்துக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அரச துறையிலுள்ள ஒவ்வொரு துறையினரும் தனித்தனியாக முடிவெடுக்காமல், மக்கள் நலன் சார்ந்து கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, சுகாதாரம், கல்வி, கைத்தொழில், விவசாயம் மற்றும் கடற்றொழில் போன்ற துறைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டதுடன், போர்ச் சூழலால் நிலக்கரி, எரிவாயு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட வலுசக்தி விநியோகக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை எதிர்கொண்டு தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக ஒவ்வொரு துறையினராலும் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள மாற்று வழிகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இதன்போது, ஒவ்வொரு துறைகளினதும் தற்போதைய எரிபொருள் தேவைகள் குறித்து அமைச்சுக்களின் செயலாளர்களால் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது. முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த ஜனாதிபதி, சுகாதாரத்துறை போன்ற அதிமுக்குயமான துறைகளுக்குத் தேவையான அத்தியாவசிய எரிபொருள் கையிருப்புகளைப் பிரதேச ரீதியாகப் பராமரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயுமாறு கேட்டுக்கொண்டார்.
அதேபோன்று, வீட்டிலிருந்து பணியாற்றும் முறைமை குறித்து மேலும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அந்தந்தத் துறை சார்ந்த அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகள் குறித்து முன்கூட்டியே எதிர்வுகூற முடியாது என்பதால், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், அதற்காக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிற்றல் குறியீட்டு முறையை மேலும் முறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள டிஜிற்றல் குறியீட்டு முறையில் காணப்படும் குறைபாடுகளை மிக விரைவில் திருத்தியமைத்து அதனைப் புதுப்பிக்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அஅதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். மேலும், உருவாகும் புதிய நிலைமைகள் குறித்து தொடர்ச்சியான கண்காணிப்புடனும் அவதானத்துடனும் இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு துறையும் தனித்தனியாக முடிவெடுப்பதற்குப் பதிலாக, ஒட்டுமொத்தமாகச் சிந்தித்து சவால்களுக்கான மாற்று வழிகளைக் கண்டறிந்து செயற்படுத்த வேண்டும் என்றும் இதற்காகப் பரஸ்பர புரிந்துணர்வுடன் விரைவாகச் செயற்படுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக்க சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதார ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே ஆகியோருடன் சுகாதாரம், கல்வி, கைத்தொழில் மற்றும் கடற்றொழில் அமைச்சுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
