மத்திய கிழக்கு – வளைகுடா போரின் காரணமாக போரில் ஈடுபடாத அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழக்க வேண்டி ஏற்பட்டுள்ளதுடன் இலட்சக்கணக்கான மக்கள் ஏதிலிகளாகப் புலம்பெயர வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள திருத்தந்தை 14ஆம் லியோ, போரில் ஈடுபட்டுள்ள தரப்புக்கள் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என்று பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
சென். பீற்றர்ஸ் சதுக்கத்தில் நேற்று இடம்பெற்ற ஞாயிற்றுக்கிழமை ஏஞ்சலஸ் பிரார்த்தனையில் உரையாற்றிய போதே திருத்தந்தை 14ஆம் லியோ மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தார். “இரண்டு வாரங்களாக, மத்திய கிழக்கு மக்கள் போரின் கொடூரமான வன்முறையை அனுபவித்து வருகின்றனர்,” என்று கூறிய போப், மோதலுக்குப் பொறுப்பானவர்கள் உடனடியாக சண்டையை நிறுத்துமாறு வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கில் உள்ள கிறிஸ்தவர்கள் சார்பாக, சண்டையை நிறுத்துங்கள் என்று இந்த மோதலுக்கு காரணமானவர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், கொடிய போரில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் உடமைகளை இழந்தவர்களோடு அதன் உணர்வுகூர்வமாகக் கலந்திருப்தாகத் தெரிவித்த திருத்தந்தை 14ஆம் லியோ, பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் நீடித்த அமைதியைக் கருத்தில் கொண்டு மோதலில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரையும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வுகளைத் தேட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
