யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு ஜுலை 12 ஆம் திகதி!  

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள நால்வரில், மூவரைத் திறமைப் புள்ளி ஒழுங்கில் தெரிவு செய்வதற்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் ஜுலை 12 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

நேற்று 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டபட்டுள்ளது.

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக் கழகப் பேரவையின் பதவிவழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மூவரும், கிழக்குப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவருமாக நான்கு பேர் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தனர்.

எதிர்வரும் ஜுலை 12 ஆம் திகதி நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள விசேட பேரவைக் கூட்டத்தில் வைத்து பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் நிபுணர் ஒருவரின் கண்காணிப்புடன் விண்ணப்பித்திருக்கும் மூவரினதும் கல்வித் தகைமை, அனுபவம், மற்றும் ஆளுமைத் திறன்களை மையப்படுத்தி, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின்  சுற்றறிக்கையில் வரையறுக்கப்பட்ட 7 வகைப் புள்ளித் திட்டத்தின் படி பேரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகப் புள்ளிகளையிடுவர்.

ஒவ்வொரு விண்ணப்பதாரரும் பெறும் மொத்தப் புள்ளிகளின் படி – திறமை அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். பல்கலைக் கழகச் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்து அவரைத் துணைவேந்தராக ஜனாதிபதி பிரகடனம் செய்வார்.

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசியர் செ. கண்ணதாசன் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபயும், சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி ஆகியோர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இருந்தும், விலங்கியல் துறைப் பேராசிரியர் பி. வினோபாபா கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இருந்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!