இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் ஆளும் அதிகார சபையாகிய பேரவைகளுக்குப் புதிய உறுப்பினர்களை நியமிக்கும் பணிகளைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகிறது.
பேரவை உறுப்பினர்களை நியமிப்பதற்கான மானியங்கள் ஆணைக்குழு வழிகாட்டல் சுற்றறிக்கையின் படி – அதற்கான தகுதி உள்ளவர்களை அதிகாரத்திலுள்ள ஆளும் கட்சியின் செல்வாக்கின் அடிப்படையிலேயே பல்கலைக்கழகங்களின் பேரவைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவது வழமையாகும். குறிப்பாக அந்தந்தப் பிரதேசங்களில் செல்வாக்கு மிக்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிபார்சின் அடிப்படையில் பல்கலைக கழக மானியங்கள் ஆணைக குழுவினால் பேரவைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.
இம்முறை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பின்னர், அக்கட்சியின் பிரதான கொள்கைகளில் ஒன்றான “ஊழலற்ற நாடு” என்ற தொனிப்பொருளின் கீழ் பல்கலைக்கழகங்களின் சுயாதிபத்தியத்துக்குப் பங்கம் ஏற்படாத வகையில், அழுத்தங்கள் மற்றும் சிபார்சுகளுக்கு அடிபணியாமல் சுதந்திரமான முறையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் புதிய பேரவை உறுப்பினர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய வழங்கியுள்ள அறிவுறுத்தலின் பிரகாரம் பல்கலைக்கழகங்களின் பேரவைகளுக்குப் புதிய உறுப்பினர்களை நியமிக்கும் பணிகளைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாகவும், முதற்கட்டமாக சில பல்கலைக் கழகங்களுக்கான புதிய பேரவை உறுப்பினர்களின் பட்டியலைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு தயாரித்துள்ளது என அறியக்கிடைத்தது.
வழக்கமாக அரசியல் வாதிகளின் பட்டியலுக்கமைய இடம்பெறும் இந்தப் பட்டியல் இம்முறை அந்தந்த மாகாண ஆளுநர்களிடமிருந்து பெறப்பட்ட நற்சான்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இறுதி செய்யப்பட்தன் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் சகல பல்கலைக்கழகங்களிலும் புதிய பேரவை உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.