கடற்றொழில் நீரியல் வள அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் பூட்டுப் போட்டதால் பரபரப்பு ; ஜனாதிபதி செயலகத்தின் தலையீட்டை அடுத்து நிலமை வழமைக்கு!

கடற்றொழில் நீரியல் வள அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தனி நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் களஞ்சிய சாலை ஒன்றை தான் கொண்டுவந்த பூட்டு ஒன்றினால் பூட்டி திறப்பை எடுத்துச் சென்றதால் பெரும் பரபரப்பேற்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் தலையீட்டை அடுத்து, அந்தப் பூட்டு மீளப் பெறப்பட்டு நிலமை இன்று சுமூகமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் பருத்தித்துறை, முதலாம் குறுக்குத் தெரு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை முதலாம் குறுக்குத் தெருப் பகுதியில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள களஞ்சிய சாலை ஒன்றுக்கு வந்த நபரொருவர், அங்கிருந்த படி களஞ்சியசாலையின் காப்பாளருக்குத் தொலைபேசியில் அழைப்பெடுத்துள்ளார்.

தன்னைக் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சரின் ஒரிங்கிணைப்பாளர் என்று அறிமுகப்படுத்திய பின் அடாவடியில் ஈடுபட்டதுடன், எவ்வித நடைமுறைகளையும் பின்பற்றாமல் தான் எடுத்துக்கொண்டு வந்த பூட்டைக் களஞ்சியசாலையில் பூட்டிய பின்னர் அதன் திறப்புகளைத் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார்.

அதன் பின்னர், இன்று காலை யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இடம்பெற்றதிகழ்வொன்றின் போது குறித்த நபரைக் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சரின் ஒரிங்கிணைப்பாளர் என்று அறிமுகப்படுத்திய போது, நேற்றைய தினம் களஞ்சிய சாலைக்குப் பூட்டுப் போட்ட நபர் இவர் தான் என்பதனை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகள் அடையாளம் கண்டுகொண்டனர்.

இதற்கிடையில், பருத்தித்துறையில் இடம்பெற்ற சம்பவம் தொட்பாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளரால் ஜனாதிபதி செயலகத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாடு கிடைத்து ஒரு மணி நேரத்தினுள் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சருக்கும், சம்பந்தப்பட்ட நபருக்கும் அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து வேறு நபர்கள் களஞ்சியசாலைக்கு அனுப்பப்பட்டு, சட்டவிரோதமாகப் பூட்டப்பட்ட பூட்டு மீளப்பெறப்பட்டது. அதன் பின் நிலமை சுமூகமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!