யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயாகொந்த நேரடியாக விஜயமொன்றை மேற்கொண்டு அதிகாரிகளிடம் நிலமைகளைக் கேட்டறிந்தார்.
இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், யாழ். மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.சிறிமோகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பில் கடற்றொழில், நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, முப்படைகளின் பிரதிநிதிகள், மாவட்டம் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவத்தில் பணியாற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பின் போது, ஏற்பட்டுள்ள அனர்த்தங்களின் நிலமை தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அனர்த்தங்கள் ஏற்படுகின்ற போது பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது, என்னென்ன முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.



