முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பிய வர்த்தகர் ஒருவருக்கு எதிராக கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாதகால கடூழியச் சிறைத் தண்டணை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள முதலாவது தீர்ப்பு இதுவாகும்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானுக்கு எதிராக அவதூறான வகையில் பேஃஸ்புக் மற்றும் வட்ஸ்அப் சமூகவலைத் தளங்களில் சோடிக்கப்பட்ட ஒலிப் பதிவு ஒன்றை அனுப்பினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மன்னாரைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு எதிராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுத்திருந்தார்.
அதனடிப்படையில், முன்னாள் அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.யூ.எம். அலிசப்ரி முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையாகி வாதாடினார். சமர்ப்பணங்களின் முடிவில் சந்தேக நபருக்கு ரூபா 5,000.00 தண்டப்பணமும், ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்த நீதவான், குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது சமூக வலைத்தளப் பதிவுகளில் இருந்து சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.