மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பான பழைய புகைப்படங்களைத் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்ததன் மூலம் பொது அமைதிக்குப் பங்கமேற்படுத்த முனைந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமண பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமணவுக்கு இன்று பிணை வழங்கியது.
முன்னொரு காலத்தில் வடக்கில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளின் புகைப்படங்களை முகப்புத்தகத்தில் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கெலும் ஜயசுமண விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
பிரான்சில் உள்ள பெண் ஒருவரது முகப் புத்தகத்தில் பகிரப்பட்ட விடுதலைப் புலிகள் தொடர்பான படத்தை மீளப் பகிர்ந்ததாகவும், அதனால் பொது மக்களிடையே அமைதியின்மை ஏற்படக் காரணாமாகினார் என்றும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபர் தனது முகப்புத்தகத்தில் படங்களை மீள் பகிர்வு செய்தமை பொது அமைதியின்மைக்கு எவ்வாறு வழிவகுத்ததென குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் நீதவான் கேள்வி எழுப்பினார்.
மேலும், பொது அமைதியின்மை ஏற்பட்டமைக்கான ஆதாரங்களை வழங்காமல், போதிய சாட்சியங்கள் இன்றி சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க முடியாது என நீதவான் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமணவுக்கு பிணை வழங்கிய கொழும்பு நீதவான், வழக்கு விசாரணையை அடுத்த வருடம் ஏப்ரல் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.