பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் – இனுவில் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தருக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் நிபந்தனையுடனான பிணை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, குற்றஞ்சாட்டப்பட்டவரை ரூபா இரண்டு இலட்சம் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவித்த நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா வெளிநாட்டு பயணத் தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படங்களை முகப்புத்தகத்தில் பதிவேற்றினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்ட அளவோடை வீதி, இனுவில் மேற்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய மனோகரன் கஜந்தரூபன் என்பவரின் வழக்கு நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இன்று விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிணை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மனோகரன் கஜந்தரூபன் கடந்த 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை இன்று 04 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.