கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போலிக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி நேபாளம் ஊடாக இலண்டனுக்குச் செல்ல முயன்ற சந்தேக நபர்கள் இரண்டு பேர் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இடம்பெற்றது. இந்திய விமான சேவை ஒன்றின் மூலம் நேபாளத்துக்குச் செல்வதற்காகக் குடிவரவு, குடியகல்வு பரிசோதனைக்கு வந்த மட்டக்களப்பைச் சேர்ந்த நபரொருவரைச் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போது, அவர் இன்னொருவருடைய கடவுச்சீட்டில் திருத்தங்களைச் செய்தமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இவரைப் போலவே லிக் கடவுச்சீட்டுடன் வேறொரு நபரும் நேபாளத்துக்குச் செல்லும் விமானத்தில் புறப்படுவதற்குத் தயாராக இருந்தமை தெரியவந்துள்ளது. அவர் குடியகல்வுப் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறுவதற்குத் தயாராக இருந்த சமயத்தில் கைது செய்யப்பட்டதாகக் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.