தாக்கப்பட்ட தமிழ் அரசுக் கட்சி உறுப்பினருக்கு அச்சுறுத்தல் : வழக்கைக் கைவாங்குமாறு கட்சித் தலைமை அழுத்தம்?

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணத் தொகுதிக் கிளைக் கூட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிக் கை கலப்பாக மாறியதனால் தாக்குதலுக்கு உள்ளாகிய கட்சி உறுப்பினரைப் பொலீஸ் முறைப்பாட்டைக் கைவாங்குமாறு கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் யாழ்ப்பாணத் தொகுதிக் கிளைக் கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை, மார்டின் வீதியிலுள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது கட்சியின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் குறித்துச் சுட்டிக் காட்டிய உறுப்பினர் ஒருவரை கட்சியின் பொறுப்பு வாய்ந்த உறுப்பினர் ஒருவர் கடுமையாக அச்சுறுத்தினார். எனினும் கூட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூட்டத்தை முடித்து வைத்தனர்.

பிற்பகல் 4:30 மணிக்கு ஆரம்பமாகிய கூட்டம் 5:00 மணியளவில் முடிவடைந்த பின்னர் கூட்டத்தில் நடந்த வாக்குவாதம் கட்சி அலுவலகத்தினுள் மீண்டும் தொடர்ந்ததாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் கட்சி உறுப்பினர் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்குள்ளான உறுப்பினர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், யாழ்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நேற்றைய கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய யாழ்ப்பாணம் தொகுதிக் கிளையின் தலைவர் மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் சிலரிடமும் பொலீசார் இன்று வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இதேநேரம், கட்சி உறுப்பினரைத் தாக்கினார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்ட உறுப்பினரிடம் வாக்குமூலம் பெறச் சென்ற பொலீஸார், அவரைச் சந்திக்க முடியாமல் திரும்பியிருக்கின்றனர். இன்று ஞாயிற்றுக் கிழமை வவுனியாவில் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்துக்குச் சென்ற அந்த உறுப்பினர், தனது பணி நிமித்தம் கொழும்புக்குச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சரி பிழைகளுக்கு அப்பால், கட்சியின் உள்வீட்டு விடயங்களைப் பேசித் தீர்க்கலாம், பொலீஸ் நிலையம் வரை சென்றது முறையில்லை என்று குறிப்பிட்டுள்ள கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் முறைப்பாட்டைக் கைவாங்கச் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கின்றனர். முறைப்பாட்டை மீளப்பெறாவிட்டால் தாக்குதலுக்கு உள்ளான நபர் எதிர்காலத்தில் கட்சியின் சார்பில் அபேட்சகராக நியமிக்கப்பட முடியாத நிலை ஏற்படலாம் என அவர் மிரட்டப்பட்டுள்ளார் என்று அறியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!