கொரோனாப் பெருந்தொற்று அபாயத்தின் காரணமாக அரச அலுவலகங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்த விரல் அடையாளப் பதிவு இயந்திர வரவுப் பதிவு முறையக் கட்டாயமாகக் கடைப்பிடிக்குமாறு திணக்களத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரச அலுவலகங்களின் சகல பணியாளர்களும் தமது உள்வருகை மற்றும் வெளிச் செல்கையை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் விரலடையாளப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சின் செயலாளர் கே.டீ.என். ரஞ்சித் அசோக இன்று வெள்ளிக்கிழமை திணைக்களத் தலைவர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்தச் சுற்றிக்கையில், கோவிட் 19 பரவுவதனைத் தடுக்கும் வகையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விரல் அடையாளப் பதிவு இயந்திரப் பாவனை தொடர்பாக வெளியிடப்பட்ட, 2009.04.16 ஆந் திகதிய அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை, 09/2009 மற்றும் 2009.06.17 ஆந் திகதிய அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை, 09/2009 (I) இன் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.