வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயப் பூசகர் உட்பட இருவர் பொலீஸாரால் கைது – நீதிமன்றத்தால் விடுவிப்பு!

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூகசர் மற்றும் ஆலய நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் என இருவர் நெடுங்கேணிப் பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற உத்தரவை மீறி தொல் பொருட்களுக்குச் சேதம் விளைவித்தனர் என்று அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் அவர்கள் இருவரும் முற்படுத்தப்பட்டனர். இந்தப் பிரச்சினையில் சந்தேகநபர்கள் இருவரும் ஏற்கனவே வழக்காளிகளாக இருப்பதானால் அவர்களை அதே வழக்கில் சந்தேக நபர்களாக்க முடியாது என்று நீதிமன்றத்துக்குச் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் படி விக்கிரகங்கள் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இதனை அடுத்து ஆலயத்தில் பூஜை நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்ததுடன் நேற்று சங்காபிஷேக நிகழ்வும் இடம்பெற்றது. சங்காபிஷேகத்தின் போது மழையையும் பொருட்படுத்தாமல் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை, விசாரணை ஒன்றுக்காக ஆலய நிர்வாகத்தினரைப் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு நெடுங்கேணிப் பொலிஸாரால் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் உட்பட இருவர் இன்று காலை நெடுங்கேணிப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றனர். அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர்.

மலையில் விக்கிரகங்களை மீண்டும் பிரதிஸ்டை செய்த போது நீதிமன்ற உத்தரவு கருத்தில் கொள்ளப்படாது தொல்பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக அவர்கள் இருவர் மீதும் நெடுங்கேணி பொலிஸாரால் குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது.

கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். எனினும், குறித்த வழக்கின் முறைப்பாட்டாளர்களாக ஆலய நிர்வாகமும், பூசாரியும் இருப்பதனால் அதே வழக்கில் அவர்களைச் சந்தேகநபர்களாகப் பெயரிடுவது வழக்குக்கு முரணாக அமையும் என்று சட்டத்தரணிகள் மன்றுக்குச் சுட்டிக்காட்டியதுடன், அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறும் மன்றிடம் கோரினர்.

பொலிஸார் மற்றும் சட்டத்தரணிகளின் கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்திய மன்று கைது செய்யப்பட்ட இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்தது.

அத்துடன், ஆலயத்தில் கட்டுமானங்களையோ மாற்றங்களையோ ஏற்ப்படுத்தக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆலயத்தில் பூசை வழிபாடுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இதேவேளை இறை விக்கிரகங்களை உடைத்தவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை விரைந்து எடுக்கு மாறும் நீதிமன்றம் பொலிஸாருக்கு மீண்டும் பணித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!