மலையக ரயில் தடம் புரள்ளவு தொடர்பாக புதிய கருத்து

மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் தடம் புரண்ட இடம் அபாயகரமான இடமாக அடையாளம் காணப்பட்டிருந்ததாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், மலையக ரயில் சேவைகளை நாளை 20 ஆம் திகதி இரவுக்குள் முழுமையாக ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

நேற்று 18 ஆம் திகதி பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவு அஞ்சல் ரயில், இதல்கஸ்ஹின்ன மற்றும் ஓஹிய ரயில் நிலையங்களுக்கு இடையில், மண்மேடு மற்றும் கற்கள் சரிந்து விழுந்ததால் தடம் புரண்டது. 

இதன் காரணமாக மலையக ரயில் சேவைகள் கொழும்பு கோட்டை முதல் நானுஓயா வரையிலும், பதுளை முதல் பண்டாரவளை வரையிலும் மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்பட்ட இந்த ரயிலின் இயந்திரம் மீது, இதல்கஸ்ஹின்ன மற்றும் ஓஹிய நிலையங்களுக்கு இடையேயுள்ள 33வது சுரங்கப்பாதை அருகே, நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் பாரிய கற்கள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்ததாக கூறப்படுகின்றது. 

மண்மேடு சரிந்ததில் இரட்டை இயந்திரங்கள் கொண்ட ரயிலின் முன்பக்க இயந்திரம் கடுமையாகச் சேதமடைந்தது. 

இருப்பினும், அதன் பின்புறம் இருந்த என்ஜின் மற்றும் பயணிகள் பெட்டிகளை ஹப்புத்தளை வரை எடுத்துச் செல்ல ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

தடம் புரண்ட ரயில் இயந்திரத்தை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றுவதற்காக நானுஓயா ரயில் நிலையத்தின் அனர்த்தப் பிரிவின் அதிகாரிகளும் ஊழியர்களும் அனுப்பப்பட்டுள்ளதாக நானுஓயா ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இத் தடம் புரள்வின் காரணமாக, மலையக மார்க்கத்திலான ரயில் சேவை கொழும்பு கோட்டை முதல் நானுஓயா வரையிலும், பதுளை முதல் பண்டாரவளை வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனால், இன்று காலை மலையக மார்க்கத்தில் இயங்கவிருந்த பல ரயில் சேவைகள் திருத்தம் செய்யப்பட்டன. 

பதுளையில் இருந்து புறப்படவிருந்த பொடி மெனிக்கே ரயில், நானுஓயா ரயில் நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 12.13 மணிக்குத் தனது பயணத்தைத் தொடங்கியது. 

எனினும், பதுளை, தெமோதரை மற்றும் பண்டாரவளை இடையே ஓடும் கலிப்சோ சுற்றுலா ரயில் வழமைபோல இயங்குவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!