வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்டத்தை வரைவு படுத்த புதிய குழு நியமனம்

வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்டத்தை வரைவு செய்வதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு குழு ஒன்றை நியமித்துள்ளது.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனைக்கமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

விசேட வைத்திய நிபுணர்கள் தொடர்பான விடயங்கள் குறித்து ஜனாதிபதியின் தலைமையில் நேற்று 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க இந்தக் குழுவை நியமித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் விசேட வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அவர்களும், ஏனைய உறுப்பினர்களாக, பணிப்பாளர் நாயகம் (வைத்திய சேவைகள்) வைத்தியர் அர்ஜுன திலகரத்ன, பிரதிப் பணிப்பாளர் நாயகம் (வைத்திய சேவைகள் II) வைத்தியர் சமித்தி சமரக்கோன் , மற்றும் சட்ட அதிகாரி வைத்தியர் சாமிந்திகா ஹேரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, 2026 ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் சேவைச் சட்ட வரைவைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு குழுவுக்கு மேலதிகமாக அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!