சரித்திரப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லும் பாத யாத்திரை தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து இன்று சனிக்கிழமை காலை புறப்பட்டது.
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய 3 மாகாணங்களையும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகல ஆகிய ஏழு மாவட்டங்களையும் இணைத்து 46 நாள்களில் 98 ஆலயங்களைத் தரிசித்து எண்ணூற்றுப் பதினைந்து கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கவிருக்கும் இந்தப் பாத யாத்திரையில் நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தமது பயணத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளனர்.
செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, பாத யாத்திரைக் குழுவின் தலைவர் ஜெயாவேல் சாமியிடம், சந்நிதியான் ஆசிரமத்தைச் சேர்ந்த மோகன் சுவாமி வேலாயுதத்தைச் சம்பிரதாய பூர்வமாக ஒப்படைத்தார். 23 வருட கால பாரம்பரியத்தைக் கடந்து இடம்பெறும் இந்தப் பாத யாத்திரை கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் கொடியேற்றத் தினமான ஜூன் 19 ஆம் திகதி கதிர்காமத்தைச் சென்றடையும்.
1972 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த முருக பக்தரான பற்றிக் ஹரிகன் ஒழுங்கமைக்கப்பட்ட குழு முறையில் கதிர்காமப் பாத யாத்திரையை ஆரம்பித்தார். அதன் பின் அவர் ஓய்வு பெற்றதும் 1978 ஆம் ஆண்டு காரைதீவைச் சேர்ந்த வேல்சாமி மகேஸ்வரனிடம் பாத யாத்திரையில் எடுத்துச் செல்லப்படும் வேலை ஒப்படைத்தார். அன்றிலிருந்து 21 வருடங்களாக வேல்சாமி மகேஸ்வரன் தலைமையில் பாத யாத்திரை நடைபெற்றது.
கடந்த இரண்டு வருடங்களாக ஜெயாவேல்சாமி இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஆரம்பத்தில் திருகோணமலை வெருகலிலிருந்து புறப்படும் இந்தப் பாத யாத்திரை 2012 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு செல்வச் சந்நிதியிலிருந்து ஆரம்பமாகிக் கதிர்காமத்தைச் சென்றடைகிறது.
கதிர்காமத்தில் இன்று கன்னிக்கால் நடும் வைபவம் இடம்பெறவிருக்கிறது. எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருக்கும் கதிர்காம மஹோற்சவம் ஜூலை மாதம் 4 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.