இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் தொடர்பில் நாளை 16ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்குப் முன்னர் அறிவிக்குமாறு, கைத்தொழில்துறையினரிடம் தொடர்புடைய அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி மேம்பாட்டு அமைச்சு இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
0712 666 660 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் தொடர்பில் அறிவிக்க முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், உரிய தகவல்களை www.industry.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக நாளைக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் தொடர்பான தகவல்களை வழங்குவது குறித்து பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் உள்ள கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி மேம்பாட்டு அமைச்சின் அதிகாரியிடம் வினவ முடியும் எனவும் அந்த அமைச்சு அறிவித்துள்ளது.
கைத்தொழில் அனர்த்த உதவி நிலையத்திற்கு இன்று 15ஆம் திகதி வரை கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் 18,321 விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவற்றில், கைத்தொழில் அமைச்சுக்கு உட்பட்ட உற்பத்தித் துறை தொடர்பான பாதிக்கப்பட்ட கைத்தொழில்களின் எண்ணிக்கை 6,362 ஆகும்.
இதற்கிடையில், 7,510 நுண் அளவிலான வணிகங்கள், 6,256 சிறிய அளவிலான வணிகங்கள், 3,998 நடுத்தர அளவிலான வணிகங்கள் மற்றும் 557 பாரிய அளவிலான வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வழங்கப்படுள்ளன.
