யாழ். மாவட்டத்தில் 124 வேட்பு மனுக்கள் ஏற்பு : 35 நிராகரிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளுாராட்சி சபைகளுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட 159 வேட்பு மனுக்களில் 35 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரான ம.பிரதீபன் தெரிவித்தார்.

வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறுகையில், “17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் இடம்பெற்ற வேட்பு மனுத் தாக்கலிலேயே இந்த எண்ணிக்கைகள் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகர சபை, 3 நகர சபைகள், 13 பிரதேச சபைகள் காணப்படுகின்றன. அவற்றில் மாநகரசபையில் 45 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆகியவற்றுடன் இரு சுயேச்சைக் குழுக்கள் என ஐந்து தரப்புகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

சாவகச்சேரி நகர சபையில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் இரு சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும், வலி. மேற்கு பிரதேச சபையில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினதும், பருத்தித்துறை பிரதேச சபையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய மூன்று கட்சிகளினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வலி. தெற்கு பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய மூன்று கட்சிகளினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

சாவகச்சேரி பிரதேச சபையில் இரு சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும், காரைநகர் பிரதேச சபையில் ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனுவும், ஊர்காவற்றுறை பிரதேச சபையில் ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டன.

இதேபோன்று, நெடுந்தீவு பிரதேச சபையில் ஜனநாயகத் தமிழத் தேசியக் கூட்டணியின் வேட்புமனுவும், வலி. கிழக்கு பிரதேச சபையிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்ணணி ஆகியவற்றுடன் ஓர் சுயேச்சைக் குழுவின் வேட்பு மனுவும்,

நல்லூர்ப் பிரதேச சபையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி ஆகியவற்றுடன் ஓர் சுயேச்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராக்கப்பட்டன.

வல்வெட்டித்துறை நகர சபையிலே இரு சுயேச்சை குழுக்களின் வேட்புமனுக்கள் உட்பட மாவட்டத்தில் 35 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் 136 கட்சிகளும் 23 சுயேச்சைக் குழுக்களுமாக 159 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் கட்சிகள் சார்பில் 22 கட்சிகளினதும்,13 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் என 35 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு எஞ்சிய 124 வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!