பதவிலியிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 03 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன், தாம் கைது செய்யப்படுவதை சுமார் 20 நாட்கள் தவிர்த்து நேற்று மனுவொன்றை சமர்ப்பித்து மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவர் சரணடைந்ததைத் தொடர்ந்து, மாத்தறை நீதவான் அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு இணங்க, தென்னகோன் நேற்று மாலை விசேட பாதுகாப்பின் கீழ் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2023 டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை, வெலிகமவில் பகுதியில் பெலேன பகுதியில் உள்ள W15 ஹோட்டலுக்கு முன்னால் வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகளால், கொழும்பு குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் குழு மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மரணமடைந்திருந்தார்.
அதற்கமைய, கொழும்பு குற்றப் பிரிவின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் முன்னாள் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட எட்டு பொலிஸ் அதிகாரிகளை சந்தேக நபர்களாகக் குறிப்பிட்டு, மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு நபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.
இருப்பினும், பல நாட்களாக கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்த முன்னாள் பொலிஸ் மாஅதிபரை கண்டுபிடிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்கள குழுக்களால் முடியவில்லை.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவை நிறைவேற்றுவதைத் தடுக்க இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தேசபந்து தென்னக்கோன் தாக்கல் செய்த ரிட் மனுவை மார்ச் 17 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதைத் தொடர்ந்து மேல்முறையீட்டு நீதிமன்றம் தென்னக்கோனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டது.
அத்துடன், 2023 ஆம் ஆண்டு வெலிகம ஹோட்டல் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்களின் சட்டத்தரணிகளுக்கும் சட்ட மாஅதிபருக்கும் இடையே எட்டப்பட்ட ஒரு உடன்பாட்டின் அடிப்படையில் தேசபந்து தென்னக்கோன் தவிர்ந்த ஏனைய ஆறு சந்தேக நபர்களையும் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை கைது செய்யாதிருப்பதற்கான உத்தரவு குறித்து மார்ச் 16ஆம் திகதி சட்ட மாஅதிபர் விசேட அறிவித்தலை விடுத்திருந்தார்.
அதன்படி கொழும்பு குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த 6 பேரை கைது செய்ய வேண்டாமென சட்ட மாஅதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அதில் அறிவுறுத்தியிருந்தார்.
