பொலீஸ் எனக் கூறி மோசடி செய்த லீசிங் பணியாளர் கைது!

பொலிஸார் எனத் தம்மை அறிமுகப்படுத்தி டிப்பர் வாகனம் ஒன்றைப் பறிமுதல் செய்ததுடன் அந்த வாகனத்துக்குள் இருந்த ரூபா ஐம்பதாயிரம் பணம் மற்றும் கைத் தொலைபேசி ஆகியவற்றைக் கொள்ளையிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் ஒருவரைக் கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்களைத் தேடுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்னர்.

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் நிதி நிறுவனம் ஒன்றில் வாடகைக் கொள்வனவு முறையில் (லீசிங்கில்) டிப்பர் ரக வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளார். அந்த வாகனம் கோப்பாய் வீதி சமிஞ்ஞையில் தரித்து நின்ற போது அங்கு வந்த நால்வர் தம்மை பொலிஸார் எனக் கூறி லீசிங் தவணைப் பணம் செலுத்தாத காரணத்தினால் வாகனத்தைப் பறிமுதல் செய்வதாகக் கூறி தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வாகனத்தை லீசிங்கில் கொள்வனவு செய்தவரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. தனது வாகனத்துக்குள் கைத் தொலைபேசி ஒன்று, 50 ஆயிரம் ரூபாய் பணம் என்பன இருந்ததாக முறைப்பாட்டில் அவர் குறுப்பிட்டிருந்தார். விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கோப்பாயைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் மூவரை தேடிவருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர் மீது சட்டத்துக்கு புறம்பாக வாகனத்தை பறிமுதல் செய்தமை, வாகனத்துக்குள் இருந்த பணம், மற்றும் கைத் தொலைபேசி ஆகியவற்றைக் கொள்ளையிட்டமை மற்றும் பொலிஸார் என மோசடியாகத் தம்மை அறிமுகப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!