சட்டமும் தெரியாது, நிர்வாகமும் தெரியாது, ஜனநாயகமும் தெரியாது. அரசமைப்பைப் பேணிப் பாதுகாப்பேன் எனச் சத்தியம் செய்து பதவியேற்ற வடக்கு ஆளுநர் அதனை மீறியுள்ளார். சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்த கருத்து மூலம் இது உறுதிப்படுத்தப்படுவதனால் ஆளுநர் ஜீவன் தியாகராஜா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், மீன்பிடி அமைச்சரின் செயலாளருமான சின்னத்துரை தவராசா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் சுற்றுலா பணியகம் மற்றும் வாழ்வாதார முகாமைத்துவ நியதிச் சட்டங்கள் என இரு சட் டங்களை ஆளுநர் வர்த்தமானியில் பிரசுரித்தார். இதற்கு எதிராக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தொடுத்த வழக்கு நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதி மன்றில் இடம்பெற்ற போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சட்டவாளர், வடக்கு ஆளுநருக்கு நியதிச் சட்டத்தை உருவாக்கும் அதிகாரமில்லை என்று அவருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது என்றும், அதன் அடிப்படையில் தான் அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்த மாட்டேன் என்று ஆளுநர் உறுதியளித்துள்ளார் என்றும் நீதிமன்றில் தெரிவித்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவவித்த சி. தவராசா மேலும் தெரிவிக்கையில்,
“அரசமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தை அறிந்து கொள்ளாமல் ஆளுநராகப் பதவியேற்றிருந்தாலும் அதன் பின்பாவது ஜீவன் தியாகராஜா அதனை அறிந்திருக்க வேண்டும். அல்லது அதில் நிபுணத்துவம் மிக்கவர்ககளின் ஆலோசனையைக் கேட்டிருக்க வேண்டும. மாறாக இப்படி நீதிமன்றம் சென்று மூக்குடைபட்ட பின்னரும் அந்தப் பதவிக்கு ஆசைப்படக் கூடாது. உண்மையில் அரசமைப்பை மீறி அவர் நடந்து கொண்டார் என்பது எப்போது உறுதிப்படுத்தப்பட்டதோ அப்போதே அவர் அந்தப் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும்.
இருப்பினும் அதனை தற்போதைய ஆளுநரிடம் இருந்து அறவே எதிர்பாரக்க முடியாது. ஏனெனில் அவருக்குச் சட்டமும் தெரியாது, நிர்வாகமும் தெரியாது, ஜனநாயகமும் தெரியாது” என்றார்.