அத்தியடியில் ’பிக்கானால்’ தாக்கி பெண் படுகொலை! கொலைச் சந்தேக நபர் தப்பிச் செல்லும் காணொலி விசாரணையாளர்களுக்குக் கிடைத்தது!!

யாழ். நகருக்கு அண்மையாகவுள்ள அத்தியடிப் பகுதியில் பெண் ஒருவர் ‘பிக்கானால்’ தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  அவரது தலையில் ஏற்படுத்தப்பட்ட கடுமையான அடிகாயமே உயிரிழப்புக்கு காரணம் என்று பிரேத பரிசோதனையில்  அறிக்கையிடப்பட்டுள்ளது.
சுப்பிரமணியம் கலாநிதி (வயது=52) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நாவற்குழியைச் சேர்ந்த இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பே அத்தியடிக்கு வந்து குடியமர்ந்துள்ளார். இவர் கணவனைப் பிரிந்து 24 வயது மகளுடன் தனியாகவே அங்கு வசித்து வந்துள்ளார். அயலவர்கள் மற்றும் உறவினர்களுடன் இவர்களுக்கு தொடர்பாடல் மிகக் குறைவாக இருந்து வந்துள்ளது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ தினமான நேற்றுமுன்தினம், பி.ப. 3.30 மணியளவில் தாயின் அலறல் சத்தம் கேட்டதாக மகள் பொலிஸ் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
‘வழமையாக வீட்டுக்கு வேலைக்கு வருபவர் நிற்கும்போது என்னை வெளியில் வரக்கூடாது என்று அம்மா சொல்லியுள்ளார். அதனால் நான் வீட்டினுள்ளேயே இருந்தேன். பி.ப. 3.30 மணியளவில் அம்மா பெரிதாக அலறும் சத்தம் கேட்டது. இரவு 6 மணியளவில் வேலை செய்ய வந்தவர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் செல்லும் சத்தம் கேட்டது. பி.ப. 6.30 மணியாகியும் அம்மா வீட்டினுள் வரவில்லை என்பதால் அலைபேசி அழைப்பு எடுத்தேன். வீட்டின் முன்பக்கம் அலைபேசிச் சத்தம் கேட்டது. பின்கதவு வழியாக சென்று பார்த்தபோது அம்மா தலையில் குருதி வடிந்த நிலையில் வீழ்ந்து கிடந்ததாக மகள் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.

வீட்டினுள் செய்வினை சூனியங்கள் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பொருள்கள் சில மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் 40 லட்சம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொலை செய்த சந்தேகநபர் கொலையுண்டவருக்கு அருகில் யாராவது சென்றால் மின்சாரம் தாக்குவதற்கு ஏற்றவகையில் இரும்புக் கம்பியை மின்இணைப்புடன் தொடுத்துவிட்டும் சென்றுள்ளார்.

தச்சன்தோப்பிலுள்ள சந்தேகநபரின் வீட்டுக்கு பொலிஸார் சென்றபோது அவரது மோட்டார் சைக்கிள் மாத்திரமே மீட்கப்பட்டது. சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!