அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் புதிதாக வேட்புமனுக்களை கோருவதற்கு இடமளிக்கும் வகையில் உள்ளூராட்சி சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கும், 2023 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைச் சமர்ப்பித்த சிலர் தற்போது உயிருடன் இல்லாத காரணத்தாலும், வேறு சிலர் நாட்டை விட்டு வெளியேறி இருப்பதுடன், சிலர் கட்சி மாறியுள்ளதாலும் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் புதிதாக வேட்புமனுக்களை கோரும் யோசனை முன்வைக்கப்பட்டது என அமைச்சர் ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இதேநேரம், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் புதிதாக வேட்புமனுக்களை கோருவதற்கு அண்மையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் பொதுவான இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
