எதிர்வரும் டிசெம்பர் முதலாம், இரண்டாம் திகதிகள் கொழும்பில் நடைபெறவிருந்த அரசாங்க – பொதுப் பரீட்சைகள் இரண்டு மறு தேதியிடப்படாமல் பிற்போடப்பட்டுள்ளதாகவும், புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளித்த பரீட்சைகள் ஆணையாளர், எதிர்வரும் முதலாம், இரண்டாம் திகதிகள் கொழும்பில் நடைபெறவிருந்த சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சையும், சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட புள்ளி விபரவியலாளர்கள் மற்றும் புள்ளி விபரவியலாளர்களுக்கான முதலாவது தடைதாணடல் பரீட்சையுமே மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ள மற்றும் அனர்த்த நிலைமைகளினால் பரீட்சார்த்திகள் கொழும்புக்கு வருவதற்றுப் பல இடைஞ்சல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே இந்த இரு பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன என்றும், புதிய திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.