பிலியந்தலை, கிரேன்ட்பாஸ் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரேன்ட்பாஸ், ஹெடேவத்த பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து T-56 ரக துப்பாக்கி ஒன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் 27 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் தொடர்பில் CCTV காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த இடத்திற்குத் துப்பாக்கியைக் கொண்டு வந்து போட்ட நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், 67 வயதுடைய கொழும்பு 14 பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
இதேவேளை, பிலியந்தலை பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையவே இந்தத் துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.
எனினும், இதனை அங்கு கொண்டு வந்தது யார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
