ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்புப் பணியில் 8,000 உள்நாட்டு, வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள்!

நடைபெற்று முடிந்த ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்கும் பணியிலும், வாக்குகள் எண்ணும் செயன்முறையிலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களைப் பிரதிநித்துவப்படுத்தும் சுமார் 8,000 கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டனர்.

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் நேற்று நடை பெற்றது. இத்தேர்தல் செயன்முறை சுதந்திரமானதும் நியாயமானதும் முரண்பாடுகள் அற்றதுமான விதத்தில் நடை பெறுகின்றதா என்பதைக் கண்காணிப்பதற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 8,000 பேர் நாடளாவிய ரீதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நச்சோ சன்செஸ் ஆமர் தலைமையிலான 68 பேரடங்கிய கண்காணிப்புக் குழுவினரும், பொதுநலவாய அமைப்பின் சார்பில் சிஷேல்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டெனி ஃபோர் தலைமையிலான 13 பேரடங்கிய கண்காணிப்புக் குழுவினரும், சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பின் சார்பில் 10 பேரடங்கிய கண்காணிப்புக் குழுவினரும், சர்வதேச நாடுகளின் சார்பில் சார்க் நாடுகள் மற்றும் ரஷ்யாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 7 கண்காணிப்பாளர்களும் உள்ளடங்குகின்றனர்.

அதேபோன்று உள்நாட்டில் இயங்கிவரும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (பவ்ரல்) சார்பில் சுமார் 4,000 கண்காணிப்பாளர்களும், சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலுக்கான பிரசாரத்தின் (கஃபே) சார்பில் 1,750 கண்காணிப்பாளர்களும் ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இக்கண்காணிப்பாளர்கள் அனைவரும் நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் தேர்தலுக்கு முன்னரான பிரசார செயன்முறைகள், தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு செயன்முறை, வாக்கு எண்ணல் மற்றும் முடிவு அறிவிக்கும் செயன்முறை, தேர்தலுக்குப் பின்னரான சூழ்நிலை ஆகியவற்றைப் பரந்துபட்ட ரீதியில் கண்காணித்து வருகின்றனர். அதற்கமைய நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகவும், இந்நிலை தொடர்வதன் ஊடாகவே சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் செயன்முறையை உறுதிப்படுத்த முடியும் எனவும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!