ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் நேற்றிரவு வரை 5 ஆயிரத்து 551 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன என்றும், கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 337 முறைப்பாடுகள் கிடைக்கப் பதிவாகியுள்ளன என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 125 முறைப்பாடுகளும், மாவட்டத் தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களுக்கு 211 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 5,401 முறைப்பாடுகளும், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 34 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேநேரம், கிடைக்கப் பெற்ற மொத்த முறைப்பாடுகளில் 4 ஆயிரத்து 929 முறைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. 622 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, நேற்று தேர்தல் வாக்குப் பதிவுகளின் போது வன்முறைகள் எதுவும் பதிவாகவில்லை என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.