ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் இடையில் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களையும் இராப்போசன விருந்தொன்றோடு நாளை இரவு சந்திப்பதற்காக ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த நிலையில் அந்தப் சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் திகதி குறித்து தேர்தல்கள் திணைக்களத்தின் அறிவிப்பு நாளை நள்ளிரவு வெளியாகலாம் என்ற நிலையில் புத்திஜீவிகளுடனான சந்திப்பை ஜனாதிபதி தள்ளிப்போட்டிருப்பது அரசியல் அவதானிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த மே மாதம் 2 ஆம் திகதி முதல் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்விசாராப் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் ஒன்றினை ஆராம்பித்திருந்தனர். தமது சம்பள முரண்பாடுகளை நீக்கக் கோரியும், சம்பள அதிகரிப்பு உட்பட வாக்குறுதி அளிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை வரை இரண்டரை மாதங்களாகத் தொடர்ந்தது. இதனால் பெரும்பாலான பல்கலைக்கழகங்களின் கல்விச் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன.
பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவருதல் பற்றியும், கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைக்குப் பொருத்தமான தீர்வுகளை வழங்குவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காகவும் ஜனாதிபதியினால் துணைவேந்தர்களைடனான சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுருந்தது. எனினும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலையீட்டை அடுத்தே இந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுருப்பதாகவும், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகளையும் சேர்த்து பிறிதொரு தினத்தில் இந்தச் சந்திப்பை நடாத்துவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் விடயமறிந்த வட்டாரங்கள் உறுதிபடத் தெரிவித்தன.