பொது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்து!

தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 7 தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் மக்கள் பொதுச்சபையின் சார்பில் 7 சிவில் சமூக பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் நல்லதம்பி ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் சி.வேந்தன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இவர்களுடன் அரசியல் சமூக செயற்பாட்டாளர்களான த.வசந்தராஜா, சட்டத்தரணி அ.ஜோதிலிங்கம், பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம், செல்வின் இரேனியஸ், இராசலிங்கம் விக்னேஸ்வரன், அரசியல் விமர்சகர் ஏ.ஜதீந்திரா மற்றும் ம.நிலாந்தன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

தமிழ்த் தேசத்தின் மக்களை ஒன்றுபடுத்துவது எனும் பிராதான நோக்குடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என தமிழ் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச் சபையும் இணக்கம் கண்டுள்ளன. இதனை செயல்முனைப்புடன் கையாளும் நோக்கில் பொதுக்கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இந்த உடன்படிக்கையின் சம தரப்புகள் எனும் வகையில், தமிழ் தேசியக் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவை புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!