வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உட்பட விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமையைக் கண்டித்து வவுனியாவில் நாளை மறுதினம் – மார்ச் 30 ஆம் திகதி, வியாழக்கிழமை இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டத்துக்கு இன, மத, கட்சி பேதம் பாராது அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உட்பட விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை தொடர்பில் திங்கட்கிழமை ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் உரையாடினேன். அவர் குறித்த விடயம் தொடர்பில் தனக்கு விவரமாக அனுப்பி வைக்குமாறு கோரியிருந்தார். அதன் அடிப்படையில் நேற்றிரவு அவசரமாக அவருக்குக் கடிதம் மூலம் பிரச்சினைகளைத் தெளிவாக எழுதி அனுப்பி இருக் கின்றேன்
இந்தப் படு பாதகச் செயலைக் கண்டித்து நாளை மறுதினம் வவுனியாவில் பெரும் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தப் போராட்டத்தில் நாங்கள் அனைவரும் கலந்து கொண்டு எமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும். குறிப்பாக வெடுக்குநாறி மலை விடயம் மாத்திரமல்லாது வடபகுதியில் உள்ள ஏனைய பிரச்சினைகள் தொடர்பி லும் நாம் எமது எதிர்ப்புக் குரலை ஆணித்தரமாகப் பதிய வைக்க வேண்டும் என்றார்.
