நாவலர் கலாசார மண்டபப் பறிப்புக்கு எதிராக முன்னணி போராட்டம்!

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் இதுவரை காலமும் பராமரிக்கப்பட்டுவந்த நாவலர் கலாசார மண்டபத்தை, மத்திய அரசாங்கத்தின் இந்து கலாசார திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் வழங்குமாறு வடமாகாண ஆளுநர் பணித்துள்ளமையைக் கண்டித்துத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தின் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் அணியும், மணிவண்ணன் தரப்பும் ஒன்றுபட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை, காலை 10 மணியளவில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “ஆளுநர் என்ற எலும்புத் துண்டுக்காக தமிழினத்தை விற்காதே”, “ஜீவன் தியாகராஜாவே உனக்கு மனசாட்சி இல்லையா” போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேநேரம், நாவலர் கலாசார மண்டபத்தின் உரித்தை – பராமரிப்பு உரிமத்தை யாழ். மாநகர சபையிடமிருந்து பறிக்க வேண்டாம் எனக்கோரி யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 28 பேர் கையொப்பமிட்டு மகஜர் ஒன்றினை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளனர். யாழ். மாநகர சபையில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஈ.பி.டி.பி தவிர்ந்த சகல கட்சிகளையும் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்களும் இந்த மகஜரில் கையொப்பமிட்டுள்ளனர்.

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலரின் 200 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுமுகமாக யாழ். மாநகர சபையினால் பராமரிக்கப்பட்டு வந்த நாவலர் கலாசார மண்டபத்தை இந்து கலாசாரத் திணைக்களத்திடம் கையளிக்குமாறு பல வழிகளிலும் மத்திய அரசாங்கத்தினால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன. எனினும், யாழ். மாநகர சபையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபையின் பதவிக் காலத்தினுள் அது சாத்தியப்படவில்லை. மாநகர சபை உறுப்பினர்களின் ஏகோபித்த தீர்மானத்தின் காரணமாக அதன் நிர்வாகம் கைமாறாமல் இருந்து வந்தது. அதன் பின் யாழ். மாநகர சபையுடன் இணைந்து இந்து கலாசாரத் திணைக்களம் நாவலர் கலாசார மண்டபத்தை நடாத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதுடன், இரு தரப்பும் ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட்டிருந்தன.

எனினும், கடந்த 19 ஆம் திகதியுடன் உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவுறுத்தப்பட்ட பின், நாவலர் கலாசார மண்டபத்தை இந்து கலாசாரத் திணைக்களத்திடம் ஒப்படைத்துவிட்டு, யாழ். மாநகர சபையை வெளியேறுமாறு ஆளுநர் உத்தரவிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!