யாழ். மாநகர ஆணையாளருக்கு ஆளுநர் ஆப்பு?

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் இருந்து யாழ். மாநகர சபையை உடனடியாக வெளியேறுமாறு ஆளுநர் அறிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகிய விடயம் தொடர்பில் யாழ். மாநகர சபை ஆணையாளர் மீது உள்ளக விசாரணை ஒன்றுக்கு உத்தரவிப்பட்டுள்ளதாக நம்பகரமாக அறியவருகிறது. விசாரணைகளின் முடிவில் ஆணையாளரை அங்கிருந்து இடமாற்றும் உத்தரவொன்று வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாவலர் கலாசார மண்டபத்தின் நிர்வாக நடவடிக்கைகளை யாழ். மாநகர சபையிடமிருந்து பறித்து, இந்து கலாசாரத் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவிட்டிருப்பதாக அண்மையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. சத்தஞ் சந்தடி இல்லாமல் நகர்த்தப்பட்ட திணைக்கள ரீதியான ஒரு உள்ளகத் தொடர்பாடல் யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் ஒரு சிலர் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்டமையினால், ஆணையாளர் மீது ஆளுநர் விசனமடைந்திருப்பதாகவும், இது குறித்து விசாரித்து, தனக்கு அறிக்கையிடுமாறு அவர் தனது அதிகாரிகளைப் பணித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, பல சந்தர்ப்பங்களில் ஆளுநருக்கும், யாழ். மாநகர சபை உறுப்பினர்களுக்கும் இடையில் பல விடயங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. யாழ்ப்பாணம் – ஆரியகுளம் பகுதியில் சமய இசையை ஒலிக்க விடுதல், ஜப்பான் தூதரகத்தினால் வழங்கப்படவிருந்த திண்மக் கழிவகற்றல் வாகனத்தின் இறக்குமதி மற்றும் வரித் தேவைகளுக்கென  வழங்கப்பட்ட நிதியைத் திருப்பிக் கொடுத்தல் மற்றும் இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தை நிர்வாகித்தல் உட்பட பல விடயங்களில் ஆளுநரின் தீர்மானத்துக்கு எதிராக மாநகர சபையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலரின் 200 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுமுகமாக யாழ். மாநகர சபையினால் பராமரிக்கப்பட்டு வந்த நாவலர் கலாசார மண்டபத்தை இந்து கலாசாரத் திணைக்களத்திடம் கையளிக்குமாறு பல வழிகளிலும் மத்திய அரசாங்கத்தினால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன. எனினும், யாழ். மாநகர சபையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபையின் பதவிக் காலத்தினுள் அது சாத்தியப்படவில்லை. மாநகர சபை உறுப்பினர்களின் ஏகோபித்த தீர்மானத்தின் காரணமாக அதன் நிர்வாகம் கைமாறாமல் இருந்து வந்தது. அதன் பின் யாழ். மாநகர சபையுடன் இணைந்து இந்து கலாசாரத் திணைக்களம் நாவலர் கலாசார மண்டபத்தை நடாத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதுடன், இரு தரப்பும் ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட்டிருந்தன.

எனினும், கடந்த 19 ஆம் திகதியுடன் உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவுறுத்தப்பட்ட பின், நாவலர் கலாசார மண்டபத்தை இந்து கலாசாரத் திணைக்களத்திடம் ஒப்படைத்துவிட்டு, யாழ். மாநகர சபையை வெளியேறுமாறு ஆளுநர் உத்தரவிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையிலேயே, யாழ். மாநகர ஆணையாளருக்கு எதிரான உள்ளக விசாரணை ஒன்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேநேரம், கடந்த காலங்களில் யாழ். மாநகர ஆணையாளருக்கு பல தடவைகள் வழங்கப்பட்ட உள்ளக இடமாற்றங்கள் இரத்துச் செய்யப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!