எரிபொருளைக் கொள்கலன்களில் நிரப்புதல், சட்டவிரோதமாகப் பதுக்குதல், அதிக விலைக்கு மறு விற்பனை செய்தல் மற்றும் எரிபொருள் கையிருப்பு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பரப்புதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலீஸ் ஊடகப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலமை காரணமாக இலங்கையில் எரிபொருள் விதியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை அடுத்து பொலீஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பொலீஸ் ஊடகப் பிரிவு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது.
ஆனாலும், சில தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கான்கள், பீப்பாய்கள் மற்றும் பிற வெளிப்புற கொள்கலன்களில் எரிபொருளைச் சேகரித்து செயற்கைத் தட்டுப்பாடொன்றை ஏற்படுத்துவதாகப் பொலீஸ் திணைக்களம் அறிகிறது.
இதனால், எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்துப் பொலீஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மறுஅறிவித்தல் வரை, மீன்பிடிக் கப்பல்கள், தொழிற்றுறை செயற்பாடுகள், பணியிடங்கள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சட்டப்பூர்வ தேவைகளைத் தவிர, கான்கள், போத்தல்கள் அல்லது வேறு எந்த கொள்கலன்களிலும் எரிபொருளை விநியோகிக்கக்கூடாது என்றும், எரிபொருளைக் கொள்கலன்களில் நிரப்புதல், சட்டவிரோதமாகப் பதுக்குதல், அதிக விலைக்கு மறு விற்பனை செய்தல் மற்றும் எரிபொருள் கையிருப்பு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பரப்புதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
