தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை நடாத்தும் மார்கழிப் பெருவிழா இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது.
யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் இன்று காலை இந்த நிகழ்வு ஆரம்பமாகியது. நிகழ்வுக்கு முன்னதாக யாழ்ப்பாணம் – வண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டைத் தொடர்ந்து திருமுறைகளைத் தாங்கிய யானை நகர்வலம் இடம்பெற்றது.
வண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தில் இருந்து யாழ்ப்பாணம் கலாசார நிலையத்துக்குத் திருமுறைகள் யானைகளினில் மீது நகர்வலமாக எடுத்து வரப்பட்டன.
இந்த நிகழ்வில், இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள பழனி ஆதீன குருமகா சந்நிதானம் சாது சண்முக அடிகளார், தென்னாடு ஆதீன முதல்வர் குணரத்தினம் (தென்னவன்) பார்த்தீபன், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் மார்கழிப் பெருவிழா இரண்டு அரங்க அமர்வுகளாக இடம்பெற்றது.
காலை 9:30 மணிக்கு தில்லைக்கூத்தன் திருவம்பலம் அரங்கும், பிற்பகல் 1:30 மணி முதல் சேக்கிழார் அமர்வும் இடம்பெற்றன.
சைவத்திருமுறை ஓதல், நடன நிகழ்வுகள் மற்றும் இந்திய, ஈழத்து அறிஞர்களின் சிறப்புரைகளும், மார்கழிப் பெருவிழாவை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட திருவாசகப் பேச்சு, கட்டுரைப் போட்டிகளின் பரிசளிப்பும், மெய்கண்டார் விருது வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.