தனியார் மயமாக்கலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமைக்காக பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கை மின்சார சபையின் அறுபத்தியிரண்டு ஊழியர்கள் நட்டஈட்டுடன் மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இலங்கை மின்சார சபையைத் தனியார்மயமாக்கும் முயற்சிகளை எதிர்த்து கடந்த இண்டு ஜனவரி மாதம் மின்சார சபையின் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த ஊழியர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர்.
அப்போதைய மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மின்சாரம் அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்ததால் நுகர்வோருக்கு இடையூறுகள் ஏற்பட்டதாக்க் காரணம் காட்டி, போராட்டத்தின் போது கடமைக்குச் சமூகமளிக்காத ஊழியர்களைப் பணி இடைநிறுத்தம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவின் புதிய அரசாங்கத்தின் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி இடைநிறுத்தப்பட்ட ஊழியர்களின் வறிதாக்கல் கட்டளைகள் மற்றும் பழிவாங்கும் வகையிலான இடமாற்ற உத்தரவுகளை இரத்துச் செய்து அவர்களுக்கான மீள் இணைப்புக் கடிதங்களை நேற்று வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது, இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் உட்பட பல இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.