இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விரிசல்கள் காரணமாக கட்சித் தலைவர் தெரிவுக்கான தேர்தல் கடைசி நேரத்தில் பிற்போடப்படலாம் என்று கட்சியின் உயர் மட்டங்களில் இருந்து அறிய வருகிறது. கட்சித் தலைவருக்கான தெரிவில் காணப்படும் உச்சக் கட்ட இழுபறியே இதற்குக் காரணம் என்று நம்பகரமாக அறிய முடிகிறது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அடுத்த தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கட்சி வரலாற்றில் என்றைக்குமில்லாத அளவுக்குத் தலைவர் பதவிக்கான போட்டி இம்முறை நிலவுகிறது. கடந்த 62 வருடங்களுக்கு மேலாக கட்சியின் வருடாந்தப் பொதுக் கூட்டங்களில் வைத்து அடுத்து வரும் தலைவரை ஏக மனதாக முன்மொழியும் நடைமுறையே பின்பற்றப்பட்டு வந்தது.
கட்சியின் தற்போதைய தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா கட்சித் தலைவர் பதவியை விட்டு விலகத் தயாரில்லாத நிலையில் கட்சிப் பொதுக் கூட்டத்தை நடத்தாமல் இழுத்தடித்து வந்தார் என்று கட்சி உறுப்பினர்களிடையே அதிருப்தி நிலை காணப்பட்டது. அதன் வெளிப்பாடாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் பகிரங்கமாகத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்ததோடு, கட்சியின் உறுப்பினர்களிடையே பிளவுபட்ட நிலையும் தோன்றியிருந்தது. இதனால் கட்சியின் தலைவர் தெரிவையும், கட்சி மாநாட்டையும் காலந்தாழ்த்தாமல் கூட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டதுடன், தலைவர் தெரிவை நடாத்துவதற்கும் வேறு வழியின்றி கட்சித் தலைவர் சம்மதித்திருந்தார்.
அதன் பின் அதன் அரசியல் குழுவின் தீர்மானத்துக்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடாத்தபடவுள்ளமை பதில் செயலாளரினால் அறிவிக்கப்பட்டு, தேர்தலுக்கான வேட்பு மனுக்களும் கோரப்பட்டிருந்தன. அதன்படி, நாடாளுமன்ற உறுப்பிர்களான சி. சிறிதரன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சீ. யோகேஸ்வரனும் தலைவர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தனர்.
மும்முனைப் போட்டிக்கு மத்தியில், பதவிக்குப் போட்டியிடுபவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் மாற்றுக் கட்சி உறுப்பினர்கள் தமக்கிடையே பலமான கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்களிப்பவர்களிடையே ஆதரவாளர்கள் பலர் பேரத்தில் ஈடுபட்டமையும் ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது.
இதுவரை காலமும் கட்சியில் பின்பற்றப்பட்டு வந்த மரபைச் சுட்டிக் காட்டிய சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் போட்டியின்றித் தலைவர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான சமரச முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். எனினும் போட்டியாளர்களான சி. சிறிதரனும், எம்.ஏ. சுமந்திரனும் சமரசமான முறையில் தலைவரைத் தெரிவு செய்வதற்கு இணங்கவில்லை. இந்நிலையில் மூன்றாவது போட்டியாளரான சீ. யோகேஸ்வரன், தலைவர் தெரிவுக்கான வாக்களிப்பில் நான் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கே எனது வாக்கை அளிப்பேன் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.
தேர்தலுக்கு இன்னும் மூன்று நாள்களே இருக்கின்ற நிலையில் வாக்களிப்புத் தொடர்பில் ஆதரவாளர்களிடையே காணப்படும் அமைதியற்ற நிலைமையும், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட வாக்குரிமை உள்ள உறுப்பினர்கள் பலர் பல பக்கங்கங்களாகப் பிளவுபட்டுப் போய் இருக்கின்ற நிலைமையையும் சாட்டாக வைத்து தலைவர் பதவிக்கான தெரிவை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடத்தாமல் பிறிதொரு தினத்துக்குப் பிற்போடுவது தொடர்பில் கட்சி உயர்மட்டம் ஆராய்ந்து வருவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் இதற்கான தீவிர முயற்சில் இறங்கியிருக்கின்றனர்.
ஆரோக்கியமில்லாத போட்டியும், ஜனநாயகத்துக்கு முரணான பேரம் பேசல்களுமே இதற்குக் காரணமென்றும் எமது செய்தியாளர் நம்பரமாக அறிந்து கொண்டார்.