இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் இன்று காலை ஆரம்பமாகியது.
காலை 7.00 மணி முதல் நாடெங்கிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. நாட்டின் பல பாகங்களிலும் வாக்களிப்பு ஆரம்பமாகிய நேரம் முதல் பொதுமக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களித்தைக் காணக்கூடியதாக இருந்தது.
இதுவரையான காலப்பகுதியில் வன்முறைகள் ஏதுமின்றி அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் மு. சந்திரகுமார் ஆகியோர் கிளிநொச்சிளில் வாக்களித்தனர்.
வன்னித் தேர்தல் தொகுதியில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் கே. யசோதினி வவுனியா கோவில் புளியங்குளம் வேலங்குளம் வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க 1 கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 352 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதிலுமுள்ள 13 ஆயிரத்து 421 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வாக்களிப்பு நிறைவடைந்ததும் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேநேரம், தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இன்றைய தேர்தலின் மூலம் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 18 பேர், கம்பஹா மாவட்டத்தில் 19, களுத்துறை மாவட்டத்தில் 11, கண்டி மாவட்டத்தில் 12, மாத்தளை மாவட்டத்தில் 5, நுவரெலியா மாவட்டத்தில் 8, காலி மாவட்டத்தில் 9, மாத்தறை மாவட்டத்தில் 7, ஹம்பாந்தோட்டை மாவட்ட த்தில் 7, யாழ். மாவட்டத்தில் 6, வன்னி மாவட்டத்தில் 6, மட்டக்களப்பு மாவட்டத்தில் 5, திகாமடுல்ல மாவட்டத்தில் 7, திருகோணமலை மாவட்டத்தில் 4, குருநாகல் மாவட்டத்தில் 15, புத்தளம் மாவட்டத்தில் 8, அனுராதபுரம் மாவட்டத்தில் 9, பொலன்னறுவை மாவட்டத்தில் 5, பதுளை மாவட்டத்தில் 9, மொனராகலை மாவட்டத்தில் 6, இரத்தினபுரியில் 11, கேகாலை மாவட்டத்தில் 9 என 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் 29 தேசிய பட்டியல் ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.